Wednesday, November 21, 2007

நந்திகிராமத்தில் கொந்தளிப்பாக இருக்கிறதாமே?

என்ன நடந்தது என்பதை ரத்தினச் சுருக்கமாக தெரிந்து கொள்வது நல்லது. நந்திகிராமம் தொழில் ரீதியாகப் பின்தங்கிய பகுதியாகும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தொழில் வளத்தைப் பெருக்குவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற நந்திகிராமத்தில் ரசாயன வளாகம் அமைப்பது என்று இடது முன்னணி அரசு முடிவெடுத்தது. இதற்காக பல கிராமங்களை காலி செய்யப் போகிறார்கள் என்ற வதந்தி அப்பகுதியில் திரிணாமுல், மாவோயிஸ்ட்டுகள், நக்சல்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளால் பரப்பப்பட்டது. மக்களின் விருப்பம் ரசாயன வளாகத்துக்கு எதிராக இருந்ததால் அத்திட்டத்தைக் கைவிடுவதென்று முடிவெடுக்கப்பட்டது. அதற்குப்பிறகும் மார்க்சிஸ்ட் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறினர். மார்க்சிஸ்ட் கட்சியினர் 27 பேர் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.
தன்னிச்சையாக விவசாயிகளால் நடத்தப்பட்ட இயக்கமாமே?“
நந்திகிராமத்தின் நிகழ்வுகளை தன்னிச் சையான விவசாயிகள் எழுச்சி என்று சிலர் கூறுகிறார்கள். ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் ஆகியோரில் ஒரு பிரிவினர் மீது ஜன. 6 முதல் மேற்கொள்ளப்பட்ட வன்முறையால் இத்தகைய கருத்தை ஏற்றுக்கொள்ள முடிய வில்லை” என்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிறகு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான மாலினி பட்டாச்சார்யா எகனாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார். நிலங் களை கையகப்படுத்துவதற்கு எதிரான போராட்டம் என்றால், ரசாயன வளாகம் அமைக் கப்படாது என்று மாநில அரசு உறுதியளித்தப் பிறகும் ஏன் வன்முறையை தொடர்கிறார்கள் என்றால் அரசியல் நோக்கத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நந்திகிராமத்தை மீண்டும் கைப்பற்றுகிறார்கள் என்கிறார்களே?
மீண்டும் திரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. மார்ச் மாதம் மாவோயிஸ்ட்டுகளின் உதவியுடன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் கூட்டாளிகள் ஆடிய வெறியாட்டத்தால் நந்தி கிராமத்தை விட்டு ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேற்றப்பட்டனர். மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்கு இவர்கள் திரும்பி வருவதையே ‘மீண்டும் கைப்பற்றுகிறார்கள்’ என்று வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கதை கட்டி விட்டுள்ளார்கள்.
இவ்வளவு நாளாக அங்கு மாநில அரசால் ஒன்றும் செய்ய முடியவில்லையா?
வன்முறைக் கும்பலால் கிளப்பி விடப்பட்ட வதந்திகளை நம்பி கொல்கத்தா உயர்நீதிமன் றம் காவல்துறை நடவடிக்கைகள் குறித்து தெரிவித்த கடுமையான விமர்சனம், நிர்வாகத்தின் கைகளைக் கட்டிப்போட்டது. அமைதியை திரும்பக் கொண்டுவர அரசு தன்னாலான முயற்சிகளைச் செய்தது. அனைத்துக் கட்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ள திரிணாமுல் காங்கிரஸ் மறுத்து விட்டது. பேச்சுவார்த்தைக்கு வராமல் மோதல் அரசியல் போக்கையே மம்தா பானர்ஜி கடைப்பிடித்தார். அவருக்கு ஆதரவாக மேதா பட்கர், நக்சல்கள், மதவெறிக் கும்பல்கள், காங்கிரஸ் மற்றும் எஸ்யுசிஐ போன்றவர்கள் களத்தில் இருந்தனர். அரசு பொறுமை காப்பதே அப்பாவிப் பொது மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான்.
மத்திய துணை ராணுவப் படையை நந்திகிராமத்தில் குவிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளாரே?
இவரும் மற்ற சகாக்களும்தான் நந்திகிரா மத்தில் துணை ராணுவத்தை நிறுத்தக் கூடாது என்று கூச்சல் போட்டனர். தற்போது துணை ராணுவம் வருகிறது என்றவுடன் குவிக்க வேண்டும் என்கிறார். காவல்துறை பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது எளிது. தற்போது அது இயலாததால் துணை ராணுவப் படைக்கும், மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் மோதல் நடப்பதாக அளந்து கொண்டிருக்கிறார். சிங்கூரில் மம்தா எழுப்பிய வெறிக்கூச்சல் அங்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சிபிஎம் வெற்றி பெற்றதால் பொசுக்கென்று போய் விட்டது. இடது முன்னணியின் கொள் கைகளுக்கு ஆதரவாக மக்கள் உறுதியாக நின்றதாலேயே இது ஏற்பட்டது. நந்திகிராமத்திலும் இதுவே நடக்கும் என்பது மம்தா மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு நன்றாகவே தெரியும்
சிபிஎம்-மின் ஸ்டாலினிய அணுகு முறை தான் பிரச்சனைக்கு காரணம் என்று ஊடகங்கள் கூறுவது உண்மையா?
“மேற்கு வங்கத்தின் தொழில்மய முயற்சிகள் வெற்றி பெற்றால் அது நவீன, தாராள மயக் கொள்கைகளுக்கு கிடைத்த வெற்றி என்றும், பிரச்சனைகள் ஏற்பட்டால் அது மார்க் சிஸ்ட் கட்சியின் ஸ்டாலினிய அணுகுமுறை தான் காரணம் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள்” என்கிறார் பிரபல பொருளாதார பேரா சிரியர் பிரபாத் பட்நாயக். தற்போது புத்ததேவ் பட்டாச்சார்யாவை விமர்சனம் செய்யும் பலர், அவர்தான் இந்தியாவின் சிறந்த முதல்வர் என்றும் கூறி வந்தார்கள். அவரை கிரிமினல் முதல்வர் என்று மம்தா தற்போது கூறுவதை கூச்ச நாச்சமில்லாமல் பிரசுரிக்கிறார்கள். ஊடகங்களின் அணுகுமுறை எதிர்மறை யாகவே உள்ளது. 200 பேரை கொன்று விட்டார்கள் என்று மம்தா எந்தவித ஆதாரமு மின்றி கூக்குரல் எழுப்பினால் அதை அப்படியே செய்தியாக்குகிறார்கள்.
அடுத்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியைத் தழுவும் என்று திரிணாமுல் மற்றும் கூட்டாளிகள் கூறுகிறார்களே?
அதோடு நிற்கவில்லை. தங்களுக்கு மக்கள் ஆதரவைத் தர வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள். முள்ளம்பன்றி முதுகு சொரிந்து விடச் சொன்னால் என்ன நடக்குமோ அதுதான் இங்கும் நடக்கும். நம்மை நாமே புண்ணாக்கிக் கொள்ள வேண்டியதுதான். தேசிய மற்றும் தமிழகப் பத்திரிகைகளும் கூட தங்கள் கைகளைப் பின்பக்கமாகக் கட்டிக் கொண்டு ஓரக்கண்ணால் மக்களின் கைகளைப் பார்த்தபடி சொரிந்து விட்டால் என்ன என்பது போல தலையை ஆட்டுகிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை மேற்கு வங்கத் தில் இடது முன்னணி தேர்தலில் வெற்றி பெறும் என்று ஒரே ஒரு நாள்தான் கூறுவார்கள். அது தேர்தல் முடிவுகள் வரும்நாள் மட்டுமே. அதற்கு அடுத்த நாளிலிருந்து இன்று தேர்தல் நடந்தால் இடது முன்னணிக்கு தோல்விதான் என்ற பல்லவியைப் பாட ஆரம்பித்து விடுவார்கள்.
-கணேஷ்

Thursday, June 28, 2007

பெரியகுளம் நக்சலைட்டுகள்-வழக்கு 'கியூ' பிரிவுக்கு மாற்றம்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் 3 நக்சலைட்டுகள் சிக்கிய வழக்கு கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்த கியூ பிரிவு போலீஸார் தீர்மானித்துள்ளனர். பெரியகுளம் அருகே காட்டுப் பகுதியில் நேற்று 3 நக்சலைட்டுகள் பிடிபட்டனர். முத்துச் செல்வம், வேல்முருகன், பழனிவேல் ஆகிய அந்த மூன்று பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து டெட்டனேட்டர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப்பகுதியில், ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் தெரிய வந்தது. கொடைக்கானலில் இவர்களுக்குப் பயிற்சி அளித்து வந்த சேகர் உள்ளிட்ட இருவர் தலைமறைவாகி விட்டனர். அவர்களையும் சேர்த்து மொத்தமாக 7 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பெரும் நாச வேலையில், ஈடுபடும் திட்டத்துடன்தான் இந்த ஆயுதப் பயிற்சியில், இவர்கள் ஈடுபட்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கு தற்போது கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கைதான 3 பேரையும் சென்னைக்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரிக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் 3 நக்சலைட்டுகள் பிடிபட்ட காட்டுப் பகுதியில் இன்று போலீஸார் தீவிரமாக சோதனை நடத்தினர். அப்போது தனியார் ஒருவருக்குச் சொந்தமான பூத் தோட்டத்தில் 2 துப்பாக்கிகள் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர். போலீஸ் பிடியிலிருந்து தப்பிச் சென்ற நக்சலைட்டுகள் போட்டு விட்டுச் சென்ற துப்பாக்கிகள்தான் இவை என்பது விசாரணையில் தெரிய வந்தது. அந்தப் பகுதியை மேலும் தீவிரமாக ஆய்வு செய்து மேலும் ஆயுதங்கள் இருக்கிறதா என்பதை அறிய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பூத்தோட்டம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. தற்போது பிடிபட்டுள்ள நக்சலைட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல், சட்டம், பாலிடெக்னிக் படிப்பை முடித்து விட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களை தங்கள் பக்கம் இழுத்து புதிய படை ஒன்றை அமைக்கத் திட்டமிட்டிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது. தங்களது அமைப்புக்கு மக்கள் போர்ப்படை என்ற பெயரையும் இவர்கள் சூட்டியுள்ளனர். இந்த படையில் தற்போது 600 பேர் உறுப்பினர்களாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. தர்மபுரி உள்ளிட்ட நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தற்போது போலீஸ் கெடுபிடி அதிகம் இருப்பதால், தென் மாவட்டங்களில் தங்களது ஆயுதப் பயிற்சியை மேற்கொள்ள முடிவு செய்து கொடைக்கானல் மற்றும் தேனி மாவட்ட மலைப் பகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளது இந்தக் கும்பல். இந்தக் கும்பலுக்கு முக்கிய கட்சி ஒன்றின் தலைவர் நிதியுதவி செய்து வருவதாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். அந்தத் தலைவரின் பெயரைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த போலீஸார் உயர் அதிகாரிகளுக்கு இந்தத் தகவலை தெரிவித்துள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து சென்னைக்கு எடுத்துச் சென்று தீவிரமாக விசாரிக்கும்போது மேலும் பரபரப்பான தகவல்கள் கிடைக்கலாம் என போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.